கப்ரால் உட்பட 5 பேருக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

கிரேக்க முறிகள் (Treasury Bills) கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உட்பட 5 பேரை அடுத்த மாதம் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த போது கிரேக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திறைசேரிப் பத்திரங்களை கொள்வனவு செய்தமையினூடாக அரசாங்கத்துக்கு 184 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் இந்த கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டதுடன்,

ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் குற்றப்பத்திரிகையில் கையெழுத்திடப்பட்ட தினம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டனர்.

தொழில்நுட்ப கோளாறை நிவர்த்தி செய்து ஆணைக்குழுவால் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமையவே இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் பிரதி ஆளுநர் தர்மசேன தீரசிங்க, தொன் வசந்த ஆனந்த சில்வா, சந்ரசிறி ஜயசிங்க பண்டித சிறிவர்தன, எம்.ஏ.கருணாரத்ன ஆகியோரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவித்து மேற்படி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin