இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு , மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் எம்பிக்கள்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைய தினம் இடைக்கால அமைச்சரவையை நியமிப்பார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் புதிய பாராளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஜித ஹேரத் மற்றும் ஹரினி அமரசூரிய ஆகியோர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின எம்.பி.க்களாக உள்ளனர். அவர்களுடன் விரைவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெற்றிடமான ஆசனத்தில் லக்ஸ்மன் நிபுணராச்சியும் இணைந்து கொள்ளவுள்ளார்.
தேசிய மக்கள. சக்தியானது ஆரம்பத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட அமைச்சரவையுடன் ஆட்சியமைக்குமா அல்லது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் பெற்றதன் பின்னர், பரந்த இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படலாம் என கட்சியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமரசிங்க, வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் மற்றும் தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்த இடைக்கால அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக விளக்கினார்.
சமரசிங்க தனது உரையின்போது, 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த திறமையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாக கூறினார்.
“ஆரம்பத்தில், ஜனாதிபதி அநுர உட்பட நான்கு பேர் எமது அமைச்சரவையில் இருப்பார்கள். மேலும் விவாதங்களுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், ஏழு அல்லது எட்டு உறுப்பினர்களாக அமைச்சரவை விரிவுபடுத்தப்படலாம்,” என்றார்.
இதேவேளை, அரசாங்கத்தை நிர்வகிப்பதற்கு புதிய ஜனாதிபதி அமைச்சுச் செயலாளர்களை நியமிப்பார் என கட்சி முக்கியஸ்தரான யயசமந்த வித்யாரத்ன நேற்று ஆதரவாளர்களுக்கு தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே ஜனாதிபதியின் செயலாளராக முன்னாள் சுங்க அதிகாரியான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை நியமித்துள்ளார்.