2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசாரணைகளை இடைநிறுத்தி, உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த இடைக்கால உத்தரவு அடுத்த ஆண்டு மார்ச் 16ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ராஜகிரியவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளுடன் தமது வாகனம் மோதிய விபத்து தொடர்பான தனது மறுசீராய்வு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமையை ஆட்சேபித்து, முன்னாள் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இந்த மேன்முறையீட்டை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குற்றப்பத்திரிகையில் உள்ள விடயம் தொடர்பான சம்பவம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அத்துடன் தமது சாரதி ஏற்கனவே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில், குற்றப்பத்திரிக்கையை தொடர மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதன் அடிப்படையில் ரணவக்க உயர்நீதிமன்றத்தில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தார்.
இந்த ஆட்சேபனை தொடர்பிலேயே உயர்நீதிமன்றம் தடையுத்தரவை இன்று பிறப்பித்தது. பொய்யான சாட்சியங்களைத் தயாரித்தமை, சாட்சியங்களை காணாமல் செய்தமை, பொய்யான தகவல்களை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, அவரது சாரதி துசித் திலும் குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோருக்கு எதிராக 16 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.