இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதான வேட்பாளர்கள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கொழும்பை மையப்படுத்தி நடத்த உள்ளனர். இதற்காக கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட கூடுமொன சில கருத்துகள் சமூகத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆனால், அத்தகைய முயற்சிகள் எதனையும் அரசாங்கம் செய்யாதென அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தாம் வெற்றிபெற்ற பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க,
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றதும் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியாகும். அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் தேசிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்