அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதற்காக இன்று வியாழக்கிழமை பங்களாதேஷுக்குத் திரும்பியுள்ளார்.
பல வாரங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால், பிரதமர் ஷேக் ஹசீனா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த நிலையிலேயே முஹம்மது யூனுஸ் பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமைத்தாங்க வேண்டுமென மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் பிரான்ஸில் வசித்துவந்த 84 வயதான முஹம்மது யூனுஸ் இன்று டுபாய் வழியாக பங்களாதேஷ் திரும்பியுள்ளார்.
“வீட்டிற்குத் திரும்புவது நல்லது” தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் ஊடகங்களிடம் முஹம்மது யூனுஸ் கூறினார்.
மாணவர் போராட்டத் தலைவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த யூனுஸ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இன்று இரவு (14:00 GMT) பதவியேற்பதற்கு முன், யூனுஸ் இராணுவத் தலைவர் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூனுஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று எங்களுக்கு ஒரு புகழ்பெற்ற நாள். பங்களாதேஷ் ஒரு புதிய வெற்றி நாளை உருவாக்கியுள்ளது. பங்களாதேஷுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்துள்ளது.” எனக் கூறினார்.
கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதே யூனுஸின் முக்கிய நோக்கமாக உள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.