இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) இந்தியாவுக்கு எதிரான முதல் ரி20 போட்டியின் போது தனது இரு கைகளாலும் பந்து வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை எதிர்கொள்ளும் போது இடது கையால் பந்து வீசினார், ஆனால் பின்னர் ரிசப் பண்டை எதிர்கொள்ளும் போது, அவர் தனது வலது கையால் பந்து வீசியுள்ளார்.
கிரிக்கெட் வீரரின் திறமையால் மக்கள் ஈர்க்கப்பட்டாலும், ஒரே ஓவரில் ஒரு பந்து வீச்சாளர் தனது இரு கைகளையும் பயன்படுத்தி பந்து வீசும்போது, கிரிக்கட் விதி புத்தகம் என்ன சொல்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தநிலையில் கிரிக்கட் விதிப்படி, பந்து வீச்சாளர் ஒருவர், வலது கை அல்லது இடது கையால் பந்து வீச விரும்புகிறாரா, ஓவர் (விக்கட்டுக்கு மேலாக) அல்லது ரௌன்ட் (விக்கெட்டைச் சுற்றி) பந்துவீச விரும்புகிறாரா என்பதை நடுவர் கண்டறிந்து, அதனை துடுப்பாட்ட வீரருக்கு தெரிவிக்க வேண்டும்.
பந்து வீச்சாளர் தனது பந்து வீச்சு முறையில் ஏற்பட்ட மாற்றத்தை நடுவரிடம் தெரிவிக்கத் தவறினால் அது நியாயமற்றது. இதன்போது நடுவர் நோபோல் (முறையற்ற பந்து) என்ற சமிக்ஞையை செய்யமுடியும் என்று கிரிக்கட் விதி குறிப்பிடுகிறது.