மியன்மாரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாம்களில் குற்றச்செயல்களுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை விடுவிப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அரசாங்கத்திடம் பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்னவினால் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிம்ஸ்டெக் தேசிய பாதுகாப்பு தலைவர்களின் 4ஆவது மாநாட்டில் கலந்துகொண்டிருந்த நிலையில் பாதுகாப்புச் செயலாளர் மியன்மார் பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை சந்தித்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், இலங்கை மற்றும் மியன்மார் இடையிலான நீண்டகால நட்புறவு, இராஜதந்திர உறவுகள் மற்றும் சமய விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அதிகாரிகள் மிகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மியன்மார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.