உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழாவிற்காக வீரர்கள் மற்றும் கலைஞர்களை 162 படகுகள் மூலம் செய்ன் நதிக்கு அழைத்து வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா எதிர்வரும் 26 ஆம் திகதி பாரீஸில் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11 ஆம் திகதி நிறைவடையும்.
இந்ந போட்டிகளை முன்னிட்டு செய்ன் நதிக்கரையில் 03 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
படகுகள் மூலம் வீரர்கள் அழைத்து வரப்பட்டு சுமார் 06 கிலோ மீற்றர் தூரப்பாதையில் 04 மணி நேரம் தொடக்க விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு ஆரம்பமானது. ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது. இதில் யுத்தத்திற்கு தயாராவதற்கு உதவக்கூடிய ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
02 ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 1900 ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதில் 24 நாடுகளைச் சேர்ந்த 997 வீரர்களும் வீராங்கனைகளும் 19 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.