பங்களாதேஷ் அரசாங்கம் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வன்முறை காரணமாக தலைநகர் டாக்காவில் மேலும் 35 பேர் உயிரிழந்ததன் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு இடம்பெறுவதாகவும், இதனை இரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து 30 சதவீத இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நிதிமன்றம் சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற கூறி தீர்ப்பை இரத்து செய்தது.
தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்ததையடுத்து போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதுடன் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியேவர வேண்டாம் என்றும், அவசர உதவி என்றால் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இவ்வாறிருக்க 300க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்களில் பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்புகளை மேற்கொள்கின்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற இந்த வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன