யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் யார் என்பது தொடர்பில் வைத்தியர் ரஜீவுக்கும் வைத்தியர் அர்ச்சுனாவுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை நீண்ட விவாதங்கள் இடம்பெற்று பின்னர் வைத்தியசாலையில் இருந்து வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கடந்த வாரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா சுகவீன விடுமுறை எனத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை கொழும்புக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் கடந்த செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனினும், அந்த நியமனம் தவறானது என்றும், தான் விடுமுறையில் இருப்பதாகவும், தானே தொடர்ந்தும் பதில் வைத்திய அத்தியட்சகர் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கடந்த ஒரு வாரமாகத் தெரிவித்து வந்தார்.
இன்றைய தினம் விடுமுறையை முடித்துக்கொண்டு கடமையைப் பொறுப்பெடுக்கப் போவதாகத் தெரிவித்த வைத்தியர் அர்ச்சுனா, காலை 9.30 மணியளவில் வைத்தியசாலைக்குள் உட்பிரவேசித்தார்.
வைத்தியசாலையைச் சுற்றி அவர் பார்வையிட்டதோடு வைத்திய அத்தியட்சகர் காரியாலயத்துக்குள் சென்று, வைத்தியர் ரஜீவை ஆசனத்திலிருந்து எழும்புமாறும், இது தன்னுடைய ஆசனம் என்றும் முரண்பட்டுக்கொண்டார்.
தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து தன்னை நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில் தானே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் எனத் தெரிவித்த வைத்தியர் அர்ச்சுனா, தனது விடுமுறை நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கடமைக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
தற்போதய பதில் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தன்னுடைய நியமனக் கடிதங்களை வைத்தியர் அர்ச்சுனாவுக்குக் காட்டியபோதும் தானே வைத்திய அத்தியட்சகர் என முரண்பட்டுக்கொண்டு வைத்திய அத்தியட்சகர் ஆசனத்தில் வைத்தியர் அர்ச்சுனா அமர்ந்தார்.
இதன்போது தலையிட்ட சாவகச்சேரிப் பொலிஸார், வைத்தியர் அர்ச்சுனாவை அத்தியட்சகர் காரியாலயத்தில் இருந்து அழைத்துச் சென்று மற்றுமொரு மூடிய அறைக்குள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பொலிஸாருடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் நாளை சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது இது தொடர்பில் முடிவு எட்டப்பட்டும் என்று வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துவிட்டு வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
வெளியேறிச் சென்ற வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலைக்கு வெளியில் குழுமிய பொதுமக்கள் அவரைத் தோளில் தாங்கிச் சென்றனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார். வைத்தியசாலை பணிகள் சுமுகமாக இடம் பெற்று வருவதை அவதானிக்கக்