ரணிலுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதில் அக்கட்சிக்குள் நெருக்கடிகள் உச்சகட்டத்தை எட்டியுத்தாக அறிய முடிகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி எதிர்வரும் இரண்டு தினங்களில் அறிவிக்க உள்ள சூழலில் வேட்பாளரை தெரிவுசெய்ய முடியாத இக்கட்டான நிலையில் பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ளதால் கட்சியின் ஆதரவாளர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் சிரேஷ்ட தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆனால், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் ராமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஆகியோர் தமது நிபந்தனைகளுக்கு இணங்கினால் மாத்திரமே ரணிலுக்கு ஆதரவு என்ற முடிவில் இருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுடன் ரணில் விக்ரமைசிங்க நடத்தியுள்ள கலந்துரையாடல்களில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் அவரது பெயர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்குத் தேவையான பணிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்சர்களின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் உறவினருமாக உள்ள உதயங்க வீரதுங்க, ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காது என தொடர்ச்சியாக கூறிவந்துள்ளனர்.

25ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில் உதயங்க வீரதுங்கவின் இந்த கருத்து அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin