ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதிய வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று வியாழக்கிழமை (11) கூடிய நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராக கடந்த முதலாம் திகதி (01.07.2024) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஜனாதிபதியின் பரிந்துரை தோல்வி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியலமைப்பு சபைக்கு தற்போதைய சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் யோசனை அரசியலமைப்புச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்பின்னர் அரசியலமைப்பு சபை இரண்டு தடவைகள் கூடியதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்த விடயம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி பிற்பகல் அரசியலமைப்பு சபை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
ஜனாதிபதியின் பரிந்துரை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களுக்கு இடையில் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.
இதன்போது பரிந்துரைக்கு எதிராக 05 வாக்குகளும், ஆதரவாக 03 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் பின்னர் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான யோசனை அரசியலமைப்பு சபையால் நிராகரிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த மாதம் 26 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் 48 ஆவது சட்டமா அதிபராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.