இலங்கை கிரிக்கெட் அணியிக்கு இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் இந்திய மற்றும் இங்கிலாந்து தொடருக்கும் இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக அவர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் அண்மையில் பதவி விலகியிருந்தார். இதனால் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது.
இந்நிலையில், சனத் ஜயசூரிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என்று இலங்கை கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளதுடன், முழு நேர பயிற்றுவிப்பாளருக்கான தேடல் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தொடர் வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட சில்வர்வுட், சமீபத்திய T20 உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து பதவி விலகியிருந்தார்.
அவருக்கு முன் ஆலோசகர் பயிற்சியாளராக செயல்பட்ட மஹேல ஜயவர்தனவும் இராஜினாமா செய்ததால், மாற்று ஒருவரை தேடும் சவாலான பணி இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ளது.
சனத் ஜயசூரியவுக்கு, விரிவான பயிற்சி அனுபவம் இல்லாவிட்டாலும், இலங்கை கிரிக்கெட்டுக்கு தேர்வாளராக பல சந்தர்ப்பங்களில் பங்களித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.