சுகயீன விடுமுறையில் இன்று (08) மற்றும் நாளை (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
அதன்படி இன்று மற்றும் நாளை கிராமப்புற தொழிலாளர்கள் மற்றும் நில அளவையாளர்களின் தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதேவேளை, நாளைய தினம் சுகயீன விடுமுறையில் பணிக்கு வருவதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, அரச சேவையின் நிறைவேற்று சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வரிச் சுமை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தைத் தணிக்கும் வகையில் அரச சேவையின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு மட்டும் 25,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் அரச, மற்றும் மாகாண அரச சேவைகள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என அனைத்துத் துறைகளையும் பொருட்படுத்தாமல் அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன்படி, நிறைவேற்று சேவை தரத்தினருக்கான உதவித்தொகையை 25,000 ரூபாவாக அரசாங்கம் உயர்த்தி, இதே உண்மைகளின் அடிப்படையில் ஏனைய ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமென அவர்கள் கோருகின்றனர்.