அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதிப் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் நேற்று திங்கட்கிழமை (24.06.24) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களையும், சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணி சார்பில் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

206 ஓட்டங்கள் வெற்றியிலக்காக கொண்ட பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை பெற்று தோல்வியுற்றது.

அவுஸ்ரேலியா அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 76 ஓட்டங்களையும், மிட்செல் மார்ஷ் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, இந்திய அணி இந்த போட்டியில் 24 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin