தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இடையே இனக்குரோதத்தை வளர்ப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் திட்டமிட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்தின் தெரிவித்தார்.
அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் சட்டத்துக்கு முரணாக இந்த அலுவலகங்களின் விவகாரத்தில் தலையிட்டு அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார் என செல்வராசா கஜேந்தின் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறையை கண்டித்து நேற்று திங்கட்கிழமை (24.06.24) இடம்பெற்ற வீதிமறியல் போராட்டத்தில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகங்களின் அதிகாரங்களை பறித்து அதனுடைய செயற்பாடுகளை முடக்கி கல்முனையில் உள்ள தமிழர்களின் உரிமையை முற்றாக பறித்தெடுக்கும் நோக்கத்தோடு பல நீண்டகாலமாக திட்டமிட்ட செயற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றன.
இந்த பறிக்கப்பட்ட பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் மீளவும் வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரு தனியான கணக்காளர் நியமிக்கப்படவேண்டும் என தொடர்சியாக கல்முனைவடக்கு மக்கள் கோரிவந்துள்ளனர்.
இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே கடந்த 92 நாட்களாக தொடர்ச்சியாக போரடிவருகின்றனர்.
ஆனால் 90 நாட்கள் ஆகியும் இனங்களுக்கிடையே ஒரு நல்லுறவை பேணவேண்டிய ஒரு அதிகாரியான மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இந்த இடத்திற்கு இதுவரை வருகைத்தரவில்லை.
போராட்டம் ஆரம்பித்த பின்னர் அரசாங்க அதிபர் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு பல தடவைகள் சென்றிருக்கிறார்.
இன்று ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு இந்த கோரிக்கைகளுக்காக சுமார் 06 மணித்தியாலயங்கள் பிரதான வீதிகள் மறிக்கப்பட்டு மிகவும் பதற்றம் நிலவிய போதிலும் அரசாங்க அதிபர் வருகைத்தரவில்லை.
இந்த நிலையில் அரசாங்க அதிபர் தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு தெரிவித்ததையடுத்து இனமுறுகல் வரக்கூடாது என இந்த ஏற்பாட்டாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு செல்வதற்கு தீர்மானித்தனர்.
இதில் பொது உள்ளாட்டு அமைச்சும் பாராமுகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விடயம் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரை நான் சந்தித்து எழுத்து மூலம் கடிதம் ஒன்றை கொடுத்திருந்தேன். இந்த பிரச்சனையை தலையிட்டு உடனடியாக தீர்த்துவைக்குமாறு ஆனால் எதுவும் நடக்கவில்லை
மக்கள் தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டும் தான் இந்த உரிமை உறுதிபடுத்திக் கொள்ளமுடியும் வேறு எந்தவழியிலும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை சுட்டிக்காட்டவதோடு மக்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டங்களுடன் நாங்கள் தொடர்ச்சியாக பக்கபலமாக நிற்போம்” என்றார்.