போதைப்பொருள் கடத்தல் உட்பட சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகளை நீதிமன்ற உத்தரவின்றி கையகப்படுத்தும் அதிகாரம் கொண்ட சபையை நிறுவுவதற்கான சட்டமொன்றை விரைவில் இயற்றுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதன்படி, பரந்த அளவிலான குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அடுத்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கோரப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தின் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்ததை உறுதிசெய்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி சொத்துக்களை கையகப்படுத்தும் அதிகாரம் உத்தேச சபைக்கு இருக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உத்தேச சபை எடுக்கும் முடிவுகளை சவால் செய்ய சட்ட விதிகள் இருக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் குவிக்கப்பட்டதாக நம்பப்படும் சொத்துக்களை கைப்பற்ற பொலிஸார் மேற்கொண்ட அண்மைய முயற்சிகளை அடுத்து இந்த புதிய யோசனை கொண்டுவரப்பட்டுள்ளது.
எவ்வாறியினும், சில வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான பொறிமுறை எதுவும் இல்லை.
எனவே, குறைபாடுகளை போக்குவதற்கு புதிய சட்டங்கள் உதவியாக இருக்கும் என்பதால் சில மாதங்களுக்குள் புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பதும் குறித்த சபையின் பொறுப்பாகும் என்றும், சொத்துக்களை அரச நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாமா அல்லது ஏலத்தில் விற்பனை செய்யப்படுமா என்பதையும் சபை முடிவு செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல்கள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற கட்டடங்களை வாடகைக்கு விடவும், வருமானத்தை திறைசேரியில் வைப்பு செய்யவும் அதிகாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.