சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் பயணித்த படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமனுக்கு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், படகில் சுமார் 260 பேர் பயணித்த நிலையில், விபத்தையடுத்து 140 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், உயிரிழந்தவர்களில் 6 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
படகில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
படகு கடலில் மூழ்கியதையடுத்து கடலில் மிதந்த 71 பேரை கடலோர காவல்படையினர் காப்பாற்றியுள்ளதுடன், அவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.