ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவுடன் இணைந்து புதிய கூட்டணி அமைக்கப்போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.
நாட்டிற்கு தேவையான கூட்டணியை உருவாக்குவதற்கு ராஜபக்சர்கள் மட்டுமன்றி நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ள ஆதரவு வழங்கியவர்களுடனும் கலந்துரையாட மாட்டேன் எனவும் அவர் தெரழவழத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த நாட்டை வங்குரோத்தாக்க நினைக்கும் எவருடனும் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்.
ஐக்கிய குடியரசு முன்னணியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முன்வைத்தோம்.
எங்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்தோம். ஆனால் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச , கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை நிகழ்ச்சி நிரலுக்கு அழைக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் எங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் எங்களுடன் கலந்துரையாட மறுத்துவிட்டனர்.
இந்த நாட்டுக்குத் தேவையான கூட்டணியை உருவாக்க ராஜபக்சக்களுடன் மற்றும் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் காரணமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.
எதிர்காலத்தில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டமைப்பானது தலைமைத்துவ சபையினால் ஆளப்படும் எனவும் அதற்கமைவாக பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படும் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்படுவார்‘ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அந்த வேட்பாளர் பதவிக்கு நான் முன்மொழியப்பட்டால், நான் போட்டியிடுவேன்.‘ என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.