மன்னிப்புக் கோரிய ரிஷி சுனக் – கன்சர்வேடிவ் பெரும் தோல்வியை சந்திக்கும்

பிரான்சின் நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது ‘டி-டே’ (D -DAY) நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கேட்டமை பேசுபொருளாக மாறியுள்ளது.

இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை ‘டி-டே’ வீரர்களுடன் கொண்டாடினர்.

டி-டே (D -DAY) என்றால் என்ன?

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் துருப்புக்கள் 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 04 ஆம் திகதி 06 ஆம் திகதி வரை , வடக்கு பிரான்ஸின் கடற்கரையில் ஜெர்மன் படைகளைத் தாக்கின.

டி-டே என்பது இதுவரையில் நடந்திராத மிகப்பெரிய கடல்வழி இராணுவ நடவடிக்கையாகும். நாஜி ஆக்கிரமிப்பின் கிழிருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்கான படையெடுப்பின் ஆரம்பத்தை குறிக்கிறது.

இதன்போது பிரான்சின் நார்மண்டியில் உள்ள ஐந்து வெவ்வேறு கடற்கரைகளில் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கின.

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீட்டப்பட்ட இதற்கான திட்டத்தில், டி-டேயாக ஜூன் 5 ஆம் திகதி முடிவுசெய்யப்பட்டிருந்தது.

அமைதியான கடல், முழு நிலவு மற்றும் பொழுது விடியும் பொழுது குறைந்த நீர் ஆகிய மூன்று சாதகமான நிலைமைகள் அந்தத் திகதியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஆனாலும் திடீர் புயல் காரணமாக 24 மணிநேரம் தாமதமாக டி- டே நடவடிக்கைகள் துவங்கின.

“D” என்பது “Day” என்பதைக் குறிக்கிறது. டி-டே என்பது ஒரு நடவடிக்கையின் முதல் நாளைக் குறிக்கும் இராணுவச் சொல் ஆகும்.

நேர்காணலுக்கு ரிஷி முக்கியத்துவம்

நேர்காணல் ஒன்றிற்கு செல்வதற்காக அந்த நிகழ்வை ரிஷி சுனக் புறக்கணித்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“சிந்தித்தால், நீண்ட நேரம் இருக்காதது தவறு, அதற்காக நான் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஆனால் டி-டே நினைவுகளுக்க மத்தியில் அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என்று நான் நினைக்கிறேன்,” என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் ரிஷியின் இவ்வாறான செயற்பாடுகள் கன்சர்வேடிவ் கட்சியில் திகைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

ஆனால், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், டி-டே தரையிறங்கியதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வுகளின் போது நார்மண்டியில் தங்கியிருந்ததாகவும் உக்ரெய்ன் ஜனாதிபதி வோல்டிமார் செலென்ஸ்கி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் தொழிற்கட்சித் தலைவர் மற்றும் சுனக் இடையே இடம்பெற்ற நேர்காணலின் போது பிரதமர் ரிஷி சுனக்கால் முன்வைக்கப்பட்ட புள்ளிவிபரங்களும் பொய் என கூறப்பட்டதுடன் இந்த புள்ளிவிபரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கன்சர்வேடிவ்வின் கூற்றுகளை ஆய்வு செய்த பிபிசி மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் காணப்படுவதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

பிரித்தானியாவில் அடுத்த மாதம் 04 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கன்சர்வேடிவ் பெரும் தோல்வியை எதிர்நோக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin