ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2015 ஆண்டு மே மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் அப்போதைய துறைசார் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளின் தங்குமிட விடுதிக்கான கட்டணம் அறவிடப்படவில்லை என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சுமார் ஒரு கோடி ரூபா (10 மில்லியன்) நிலுவைத் தொகை இவ்வாறு அறவிடப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நிலுவைத் தொகை தொடர்பாக இதுவரை எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், தணிக்கைக்கு தகவல் அளிக்கும் அந்த நிறுவனத் தலைவர்கள், அப்போதைய விவசாய அமைச்சரின் உத்தரவிற்கமைய பாதுகாப்புப் பணியாளர்களுக்கு தங்கு விடுதியை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கான உண்டியல்கள் வழங்கப்படவில்லை என்றும், விடுதியை வாடகைக்கு எடுத்த அதிகாரிகள் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியை அறிவிடுவதற்கு அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.