உலக சுற்றாடல் தினத்தின் தேசிய கொண்டாட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் இந்த வேளையில் சிலர் விமர்சனங்களை முன்வைத்து அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களை அந்த நிலையிலிருந்து மீட்பதே அவசியம் எனவும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஆரம்பித்துள்ளோம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வெள்ள நிலைமை சீரானதன் பின்னர் அந்த பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். மேலும் சேதமடைந்துள்ள பாலங்கள், வடிகாண்கள், வீதிகள் ஆகியவற்றைப் புனரமைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளன. இந்த நடவடிக்கையில் பணத்தை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் தேவையான பணிகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து மாவட்ட
உலக சுற்றாடல் தினத்தின் தேசிய விழாவை ஜூன் 05 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விழாவை இரத்து செய்து, அந்த நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆனாலும் உலக சுற்றாடல் தின தேசிய விழாவிற்காக நாடளாவிய ரீதியில் பத்து இலட்சம் செடிகளை நடும் பணியை நாம் முன்னெடுக்கவுள்ளோம். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செடியை நட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.’’ என்று தெரிவித்தார்.