சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்ற மாலைத்தீவிற்குள் நுழைய இஸ்ரேலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் மேற்கொள்ளப்படும் போரைத் தொடர்ந்து மாலைத்தீவு அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையின் பரிந்துரையைத் தொடர்ந்து, இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்கு தடை விதிக்க மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹ்சான் இந்த முடிவை அறிவித்தார்.
இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கும், இந்த முயற்சிகளை மேற்பார்வையிட அமைச்சரவை துணைக்குழுவை நிறுவுவதும் அமைச்சரவை முடிவில் அடங்கும்.
கூடுதலாக, பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் விடயத்தில், பலஸ்தீன தேவைகளை மதிப்பிடுவதற்கு ஒரு சிறப்பு தூதுவரை நியமிக்க ஜனாதிபதி முய்ஸு முடிவு செய்துள்ளார்.
மேலும் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டும் பிரச்சாரத்தை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.