பிரித்தானியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பிரதமர் ரிஷி சுனக் “ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ள பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தில் ஜூலை மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்ததிலிருந்து தேர்தலம் களம் சூடுபிடித்துள்ளது.
அந்நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இந்நிலையில் தேர்தல் குறித்த திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற வாக்கெடுப்புக்குப் பின்னர் அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டடதையடுத்து பிரதமரானார்.
பிரதமர் ரிஷி சுனக் முதன் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ளும் தேர்தல் இதுவாகும்.
இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அண்மையில் பின்வாங்கினர்.
இவ்வாறான கவலைகளுக்கு மத்தியில் “ஒவ்வொரு வாக்குக்கும் போராடுவேன்” பிரதமரின் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இங்கிலாந்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதுடன் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் அந்நாட்டு பொருளாதாரம் 0.6 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார மீட்சி எனும் கருப்பொருளில் தேர்தல் போட்டியை வடிவமைப்பதில் சுனக்கிற்கு நம்பிக்கை உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார மறுமலர்ச்சியை வழங்குவதற்கான சிறந்த வேட்பாளர் தான் என்று பிரிட்டிஷ் வாக்காளர்களை நம்ப வைக்கும் அவரது திறனைப் பற்றி அவர் பந்தயம் கட்ட தீர்மானித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் பொருளாதாரம் முக்கிய பேசுபொருளாக மாற உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இதன் நன்மை தீமை குறித்து ரிஷி சுனக் ஆராய வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.