பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தகுந்த நேரத்தில் இதனை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
”பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை எடுப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் கூறியுள்ளார்.
அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனியரசாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்த நாளில் ஜனாதிபதி மக்ரோன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, “ரஃபாவின் காட்சிகளைக் கண்டு நானும் மிகவும் வருத்மடைகிறேன். இதற்கான பதில் நடவடிக்கை அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பலஸ்தீன காசா நிலவரம் நாடாளுமன்ற கீழ்ச்சபையாகிய தேசிய சட்ட மன்றத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதங்களுக்கு இடையில் தீவிர இடதுசாரி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் திடீரென எழுந்து நின்று பலஸ்தீனக் கொடியைக் காட்டினார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
கொடியை தூக்கிப் பிடித்த அமைச்சரை தேசிய சட்ட மன்றத்தின் உள் விதிகளுக்கு அமைய 15 நாட்களுக்கு சபையில் இருந்து இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்ற சம்பளத் தொகையில் பாதியை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.