கனடாவில் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க மாரத்தான் ஓட்டத்தில் (Ottawa) நகர முதல்வர் பங்கேற்றார்.
கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven னில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தாய், அவரது நான்கு குழந்தைகள், குடும்ப நண்பரொருவர் என ஆறு பேர் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க, ஏழு வயதான இனுகா விக்கிரமசிங்க,நான்கு வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, இரண்டு வயதான ரின்யான விக்கிரமசிங்க, இரண்டரை மாத குழந்தையான கெல்லி விக்கிரமசிங்க என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 வயதுடைய காமினி அமரகோன் என்பவரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் டிலந்திகா ஏக்கநாயக்கவின் கணவர் தனுஷ்க விக்கிரமசிங்க, படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பத்தில் குறித்த வீட்டில் வசித்து வந்த 19 வயதான இலங்கையைச் சேர்ந்த பெப்ரியோ டி-சொய்சா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஆறு கொலைகள் மற்றும் ஒரு கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒட்டாவா வரலாற்றில் இடம்பெற்ற மோசமான கொலைச் சம்பவத்தில் உயிர் பிழைத்த தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஒட்டாவா நெடுந்தூர ஓட்டத்தில் நகர முதல்வர் Mark Sutcliffe பங்கேற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் ஒட்டாவா நகர முதல்வர் இந்த நெடுந்தூர ஓட்டத்தை 3:55:56 நேரத்தில் நிறைவு செய்தார்.
இதில் சேகரிக்கப்படும் பணத்தை, தனுஷ்க விக்கிரமசிங்கவுக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
“தனுஷ்க விக்கிரமசிங்க நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சோகத்தை சந்தித்துள்ளார்” என ஒட்டாவா நகர முதல்வர் Mark Sutcliffe தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் நிதி சேகரிக்க முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tartan ஒட்டாவா சர்வதேச மாரத்தான் ஓட்டப் போட்டி இந்த வருடம் ஐம்பதாவது ஆண்டாக நடைபெற்றது. இம்முறை 33,000 பேர் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.