ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதானமானவர்கள் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளால் அரசுக்கு ஏற்பட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை மீளப்பெற இதுவரை எதுவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகையை மீளப்பெறுவதற்கு தணிக்கையாளர்கள் பலமுறை பரிந்துரைத்த போதும் இதுவரை பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகள் நிறுவனங்களின் தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது அந்த தலைவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் என கணக்காய்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாரிய ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் இடம்பெற்ற சுமார் 12 நிறுவனங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீனி வரி மோசடி, உரச் சம்பவம் போன்ற பெரும் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரிகளுக்கு எதிராக இதுவரை எதுவித சட்டமும் அமுல்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோசடிகள் மற்றும் ஊழல்கள் அதிகளவு இடம்பெறுவதற்கு சில அரசியல்வாதிகள் இவ்வாறான அதிகாரிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே முக்கிய காரணம் என கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.