முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக்காலத்தில் முறையான பதிவுகள் இன்றி, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருந்துகளின் தரம் சரிபார்க்கப்படாமல் 306 தடவைகள் இலங்கைக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது குறித்த மருந்துகள் வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலுள்ள நிலையில் வெகு விரைவில் அவற்றை சோதனைக்கு உட்படுத்துமாறு வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
அவ்வாறு இல்லையெனில் குறித்த மருந்துகள் மூலம் மேலும் உயிர் சேதங்கள் ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பியின் ஒவ்வாமை காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு முன்னாள் சுகாதார நிர்வாகத்தின் மூலம் தரத்தை பரிசோதிக்காமல் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை தொடர்ந்தும் பயன்படுத்தி உயிர் சேதங்கள் ஏற்படுவதை தடுக்க தற்போதைய சுகாதார நிர்வாகிகள் மருந்துகளின் தரத்தை சரிபார்க்க உத்திகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் சமல் சஞ்சீவ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலவச சுகாதார சேவை இனி பாதுகாப்பானது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம், போதியளவு மருந்து விநியோகம் இருக்கும் போது, சுமார் 4500 மில்லியன் ரூபா மருந்துகளை மீள இறக்குமதி செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை புறக்கணித்து உத்தரவுகளை சமர்ப்பித்துள்ளமை தொடர்பில் மருத்துவ விநியோகப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மோசடிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை விரைவில் நியமிக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு.
கடந்த காலத்தில் 30 நிறுவனங்களுக்கு முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் அல்லது தர பரிசோதனைகள் இன்றி மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோயாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் போது அத்தியாவசியமற்ற மருந்துகளை கூட அத்தியாவசிய மருந்துகளாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் சுகாதார செயலாளர் மற்றும் அவரது குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.‘ என தெரிவித்தார்.