கேப்பாபிலவு காணிப்பிரச்சினைக்கு முடிவு வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்கள் காணிகளை விடுவிக்க கோரி போராடிவரும் கேப்பாபிலவு மக்கள் இன்று (26) புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ‘உறுமய‘ காணி உரிமை வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியினை சந்தித்து காணிவிடுவிப்பு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற மக்களுக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்விற்கு ஜனாதிபதி வருகை தந்திருந்த போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினை சந்தித்து மனுக்கொடுப்பதற்கு கேப்பாபிலவு மக்கள் சென்றபோது பொலிஸார் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
கோரிக்கையை முன்வைக்க நீண்ட நேரம் காத்திருந்த மக்களை வடமாகாண ஆளுனர் வந்து சந்தித்துள்ள நிலையில் ஆளுனரிடம் கேப்பாபிலவு மக்கள் மனுவினை கையளித்துள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் ஜனாதிபதியிடம் தங்கள் கோரிக்கையினை முன்வைக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேப்பாபிலவு மக்களில் இருவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதியை சந்தித்த பின்னர், கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தபோது இராணுவ தளபதியிடம் கதைத்துவிட்டு நல்ல பதில் தருவதாகவும் அவசரமாக இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதாகவும் உறுதியளித்ததாக கேப்பாபிலவு மக்கள் தெரிவித்தனர்.