அழகுக்கலை நிலையங்களுடன் தொடர்புடைய போலி வைத்தியர்கள் குறித்த நிலையங்களுக்கு வருகைத்தரும் பெண்களின் தோலின் நிறத்தை வெண்மையாக்குவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஊசி மருந்துகளை செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் வைத்தியர் பிரசாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
போலி வைத்தியர்களை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த விடயம் தெரியவந்ததாகவும், இந்த நடவடிக்கைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊசி மருந்துகளை செலுத்திக்கொள்ளும் பெண்கள் குறுகிய காலத்திற்குள் எலும்பு மஜ்ஜையிலிருந்து இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறனை இழந்து விடுவதாகவும், முடி உதிர்தல் போன்ற பக்கவிளைவுகளுக்கு உள்ளாவதாகவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, நாடளாவிய ரீதியில் போலி வைத்தியர்கள் குறித்த தகவல்கள் கிடைத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களில் மாத்திரம் இவ்வாறான 15 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.