பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய சட்டவிரோத குடியேற்றங்களைக் நிறுவுவதற்கும் உறுதியளித்தனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 800,000 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ரஃபாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் காசாவிற்கு மனிதாபிமான உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசர தேவையை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக புதிய மிதக்கும் கப்பலை முதன்முறையாக அமெரிக்கா உருவாக்கி அந்த பகுதிக்குள் கப்பலை அனுப்பி வைத்தது.
மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வார் ஆகியோருக்கு எதிராக போர்க்குற்றம் தொடர்பில் பிடியானை பிறப்பிக்கப்பட வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டத்தரணி கரீம் ஏஏ கான் கேசி கடந்த திங்கட்கிழமை (20) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இதற்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.
இவ்வாறு பல்வேறு உயர் நாடுகளின் காசாவிற்கான ஆதரவு இஸ்ரேலை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.ஆனாலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசா மீதான தாக்குதலிலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை.