தம்புல்லா தண்டர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையை நிறுத்துவதாக லங்கா பிரீமியர் லீக் இன்று (22) அறிவித்துள்ளது.
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் (LPL) – தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
பங்களாதேஷை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய பிரஜையான இவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தமீம் ரஹ்மானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாக இல்லாத போதிலும், லங்கா பிரீமியர் லீக்கின் நேர்மை மற்றும் சுமூகமான பயணம் மிக முக்கியமானது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தம்புல்லா தண்டர்ஸ் அணியின் உரிமையை நிறுத்துவது லங்கா பிரீமியர் லீக்கின் மதிப்பு மற்றும் நற்பெயரை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பங்கேற்பாளர்களும் நடத்தை மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் உயர்ந்த தரத்தை கடைபிடிப்பதை உறுதிசெய்வதாக லங்கா பிரீமியர் லீக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.