கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் மற்றும் தனியார் துறை இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் பசுக்களுக்கு பரவி சரும் எல்.எஸ்.டி நோயை (LSD Dieses) கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, கால்நடைகளின் நோய்த்தடுப்பு பிரிவு பணிப்பாளர் (APAH) இன் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியதோடு குறித்த நோய் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள கால்நடைகளுக்கும் இந்த நோய் பரவியிருந்த நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதால் அதனை கட்டுப்படுத்த முடிந்தது.
மேலும் இந்த நோயைக் கட்டுப்படுத்துவற்கு தற்போது கிடைக்கப்பெறும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதுமாக இல்லையென்றால், அவசரகால கொள்வனவின் கீழ் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த LSD நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள பசுக்களின் பால், மற்றும் இறைச்சியை உட்கொள்வதனால் மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என டொக்டர்.ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
பசுக்களுக்கு தொற்றியுள்ள இந்த நோயினால் அவை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றன. இதனால் தினசரி அவை கறக்கும் பாலின் அளவு குறைகிறது. இது பால் பண்ணையாளர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துமே தவிர, வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இருப்பினும் கடந்த ஆறு மாத காலத்துக்குள் மத்திய மாகாணத்தில் சுமார் 135 கால்நடைகள் அம்மை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நோய்வாய்ப்பட்ட பசுக்களிடமிருந்து மனிதர்களுக்கு LSD பரவும் அபாயம் இல்லை எனவும டொக்டர். ஹேமலி கொத்தலாவல வலியுறுத்தியுள்ளார்.