இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாற்றிக்கொண்டிருக்கும் மாணவி ஒருவரின் புகைப்படத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமிழ் குழந்தை ஒன்று இருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர்.
அது தொடர்பான புகைப்படத்தை இந்த உயரியச் சபையில் நானும் காண்பித்திருந்தேன்.
எனினும், அது குறித்து விசாரித்தபோது அப்படியொரு மாணவி இல்லையென கூறப்படுகின்றது. இந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது.
இதனையே அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agens Callamardடும் கேட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்ளக பொறிமுறை மூலம் ஒரு தீர்வை காணுகின்றோம் என தெரிவித்திருந்தார்.
அதற்காக வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை இந்த மண்ணில் அவ்வாறு நடக்கவில்லை.
இந்நிலையில், காணாமல் போன குழந்தைகள், படையினரிடம் சரணடைந்த போராளிகள் உள்ளிட்டவர்களை சர்வதேச நீதியின் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும்.
எனினும், இலங்கைக்குள் அது நடக்காது, இங்கு கொலை செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கின்றார்கள். சில சர்வதேச நாடுகளில் அவர்களுக்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இலங்கையில் உண்மை, நியாயம், சத்தியம் மரணித்துவிட்டது. சட்டம் இங்கு செயலில் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.