இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாயக்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
இந்த நிகழ்வு மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“எவ்வாறாயினும், போராளிகளாக இறந்தவர்களை நினைவுகூருவதற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உள்ள உரிமையை தான் அங்கீகரிப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், பயங்கரவாதிகளின் கொண்டாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். “இது தமிழ் மக்களின் இறந்த உறவினர்களின் நினைவேந்தல் அல்ல.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நினைவேந்தல், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலப் பகுதியில் புலிகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“நினைவேந்தல் நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
“ஒரு மத சடங்கு அல்லது சமூக நிகழ்வு மூலம் இறந்த அன்புக்குரியவரை நினைவுகூருவதை நண்பர்களும் குடும்பத்தினரும் தடுக்க முடியாது.
இருப்பினும், நாகரீகமான மக்களாக, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்ற கொடூரமான பயங்கரவாதிகளை கொண்டாடுவதை உலகில் எங்கும் அனுமதிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.
இலங்கை அரசாங்கம் கோழைத்தனமாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கிலும் கொழும்பிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த அனுமதித்துள்ள அதேவேளை, அதற்கு இடையூறு விளைவிக்க முயன்றவர்களைக் கைது செய்தமைக்கு அவர் இதன்போது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னஸ் காலமார்ட்டையும் அவர் விமர்சித்துள்ளார்.