ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா? நடப்பது என்ன?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தற்போது முழு சர்வதேச நாடுகளின் பார்வையும் ஈரான் பக்கம் திரும்பியுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி, கிழக்கு அஜர்பைஜானுக்கான ஈரானிய ஜனாதிபதியின் பிரதிநிதி அயதுல்லா முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர் இந்த விபத்தில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் நிலை குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் துருக்கிய ஆளில்லா விமானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை நோக்கி மீட்புக்குழுவினர் நகர்வதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

மோப்ப நாய்கள் உட்பட 73 குழுக்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன, ஆனால் வானிலை கடினமாக இருப்பதாகவும் இதனால் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய ஆளில்லா விமானத்தால் கண்டறியப்பட்ட விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் இடம் தவில் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து 100 கிமீ (62 மைல்) தொலைவில் இருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புக் குழுவினர் தற்போது அப்பகுதிக்கு வர முயற்சி செய்து வருவதாக அல் ஜசீராவின் செய்தியாளர் ரெசுல் சேடார் தெரிவித்துள்ளார்

மீட்புக் குழுக்கள் எவராலும் ஹெலிகாப்டரை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்த மற்ற நபர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை கூற முடியவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மேக மூட்டம், மூடுபனி மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு பங்களித்திருக்க வேண்டும் என்று விமான நிபுணரும் முன்னாள் ஹெலிகாப்டர் விமானியுமான பால் பீவர் கூறியுள்ளார்

நிலையான இறக்கை விமானங்களைப் போலல்லாமல், ஹெலிகாப்டர்கள் வானிலைக்கு மேலே பறக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “ஹெலிகாப்டர்களுக்கு அந்த வசதி இல்லை” என்றும் பீவர் அல் ஜசீராவிடம் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin