பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்திற்கு மத்தியில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இணைப்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தினார் .
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் என தெரிவித்த அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஓர் பகுதி எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“பாகிஸ்தான் வசம் அணுகுண்டு உள்ளதால் அவர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மணி சங்கர் அய்யரும், ஜம்மு காஷ்மீரின் ஃபாரூக் அப்துல்லாவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர். ராகுல் காந்தி வேண்டுமானால் அணுகுண்டை பார்த்து அஞ்சலாம். எங்களுக்கு அச்சம் இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை நிச்சயம் மீட்போம்” என தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்க அதிகரிப்பால் சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸாரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.