காஸா நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதல் நடாத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் “தேவையேற்படின் இஸ்ரேல் தனது விரல் நகங்களால் போராடும்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ரஃபா படையெடுப்பு உட்பட காசாவில் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்க ஆயுத உதவிகளை நிறுத்தினால் இராணுவ நோக்கங்களை அடைவதற்கான இஸ்ரேலின் திறனை பாதிக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதுவர் கூறியுள்ளார்.
காஸா நகரமான ரஃபாவில் தரை வழித்தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆயுத உதவிகள் நிறுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று வியாழக்கிழமை (10) எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் எச்சரிக்கையை மீறியும் காசா நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக சுமார் 80,000 பலஸ்தீனியர்கள் ரஃபாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேலிய இராணுவம் கையகப்படுத்தியதால், கடந்த மூன்று நாட்களாக காஸாவுக்கு கிடைக்கப்பெறும் உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் பஞ்சம் ஏற்பட்டு மனிதாபிமான நடவடிக்கைகளை முற்றிலும் முடக்குகிறெதென ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.