தொழில் நிமித்தமாக மலேசியாவுக்கு சென்ற நிலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்த மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த இளைஞரின் உடலானது நேற்றிரவு 11.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
மஸ்கெலியா, மொடிங்ஹேம் தோட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார் டேவிட்சன் என்ற 24 வயதுடைய இளைஞன் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக தொழில் வேலை வாய்ப்புக்காக மலேசியா சென்றுள்ளார்.
இளைஞர், கொலாம்பூரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி கொதிகலன் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.
இதனால், படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சைக்காக கொலாலம்பரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ச்சியான சிகிச்சை இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 5 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், சடலம் நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க, சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், சடலம் இன்று காலை பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், உயிரிழந்த இளைஞரின் சொந்த ஊரான மஸ்கெலியாவுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.