இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நேற்று வியாழக்கிழமை அறிவித்த பின்னரும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெயிலி மிரர் ஆங்கில செய்தி இணையத்தளம் தெரிவிக்கின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினா்களே நாடாளுமன்றத் தேர்தலை விரும்புவதாகவும் அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் நடத்தப்பட வேண்டும். அதன் பிரகாரமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை நடதத முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் நேற்று கொழும்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்களின் பிரகாரம் 2025ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சில சமயங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துக் காபந்து அரசாங்கம் (Caretaker Government) ஒன்றை அமைத்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் யோசனை ஒன்றை ரணில் வைத்திருப்பதாகவும் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ”ஒருவன்” ஆசிரிய பீடம் ஏற்கனவே செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுமிருந்தது.
இதேவேளை ஜூலை மாத இறுதியில் இருந்து ஓகஸ்ட் மாத முற்பகுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் 1981 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் இலக்கம் 5 இன் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.