பிரான்ஸ் நாட்டின் இரயில் ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது முதல் பிரான்ஸில் விவசாயிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்தப் போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரான்ஸ் அரசாங்கம் விவசாயத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
இருந்தபோதிலும் தற்போது இரயில்வே ஊழியர்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலைநிறுத்தம் காரணமாக பல துறைகள் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது, ஊதியத்தில் மேலதிக கொடுப்பனவுகள் கோரியே அவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல தரப்பினருக்கு மாத சம்பளத்தை அரசு உயர்த்திவரும் நிலையில், இதனை காரணமாக வைத்து தமக்கும் சம்பளத்தை உயர்த்த வற்புறுத்தியே மேற்படி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
21ஆம் திகதி வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ள நிலையில், மறுநாள் மே 22ஆம் திகதி தொழிற்சங்க தலைவர்களுடன் SNCF நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது