தேசிய அரசாங்கத்துக்கு கபீர் ஆதரவு

கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படுமானால் அது நாட்டின் நன்மைக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தல்கள் நடத்தாமல் ஒரு பொது நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இதற்கு ஒத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அபிலாஷைகளுக்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது மே தின உரையில் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

”ஜனாதிபதியின் அழைப்பு குறித்த உத்தியோகபூர்வ கருத்தை கட்சித் தலைவர்களுடனான உள்ளக கலந்துரையாடலின் பின்னரே தெரிவிக்க முடியும்.

எவ்வாறாயினும், நாடு இன்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் இன்னும் ஐந்து வருடங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய தருணத்தில் உண்மையான தேசிய அரசாங்கமொன்றை அமைத்திருக்க முடியும். என்றாலும், அந்த சந்தர்ப்பம் பறிபோய்விட்டது.” என்றும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

சில அதிருப்திகள் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வில் கபீர் ஹாசீம் கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் வெளியாகியிருந்த பின்புலத்திலேயே கபீர் ஹாசீம், தேசிய அரசாங்கத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin