காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது புகைப்படங்களையும் கனேடிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் இந்தியா அரசினால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார் கடந்த வருடம் ஜூன் மாதம் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிஜ்ஜார் படுகொலை கனடா வாழ் சீக்கியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த படுகொலைக்கு கனடா இந்தியாவை குற்றம் சுமத்தியது.
எவ்வாறாயினும் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது. இதனையடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நிஜ்ஜாரின் படுகொலையுடன் தொடர்புடைய 22 வயதுடடைய இரு இளைஞர்கள் மற்றும் 28 வயதுடைய நபரொருவரை கனேடிய பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (04) கைது செய்யதனர்.
இவர்கள் சுமார் 05 வருடங்களாக கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.
படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு சந்தேகநபர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்களுக்கு இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயப்படும் எனவும் அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.