கலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குக் காரணமான குழுவைச் சேர்ந்தவர்கள் கனேடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் “இந்திய அரசாங்கத்தால் பணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘hit squad’ புலனாய்வாளர்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக” சிபிசி வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்பதுடன், பொலிஸாரும் அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்திய – கனடா இடையிலான உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டதுடன், பெரும் இராஜதந்திர நெருக்கடிகளும் ஏற்பட்டிருந்தன.
இந்நிலையிலேயே, ‘hit squad’ புலனாய்வாளர்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் சர்வதேச மாணவர்களாக கனடாவிற்குள் நுழைந்ததாகவும், ஒன்டாரியோ மற்றும் ஆல்பர்ட்டா மாகாணங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.