ரஜினியில் “கூலி” படத்திற்கு எதிராக இளையராஜா நோட்டீஸ்

ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 171வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் பெயரை அறிவிக்கும் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரும், இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்த டீசரில் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் “வா வா பக்கம் வா” பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, அனுமதியின்றி கூலி படத்தில், தன்னுடைய இசையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்து இளையராஜா தரப்பில் இருந்து படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

“கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இளையராஜாவிடம் இருந்து எந்த அனுமதியும் பெறவில்லை.

இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றமாகும் என தெரிவித்து நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை.

அத்துடன், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்தில் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூலி திரைப்படத்தின் டீசரிலும் “வா வா பாக்கம் வா” பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு உரிய அனுமதியை பெறவேண்டும் எனவும் அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறில்லை எனில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin