அரசியல் கட்சிகளாக மாறியுள்ள மலையகத் தொழிற் சங்கங்கள்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 50,000 தோட்டத் தொழிலாளர்கள் தொழிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மே தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பை தொழிலாளர் சங்கம் வெளியிட்டிருக்கின்றது.

கடந்த 2021ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்கள் 1,33,000 பணியிலிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 86,000 வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விலகியவர்கள் வேறு தொழில்களுக்காக தலைநகர் கொழும்புக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள தேயிலைத் தோட்டங்கள்

மலையகப் பகுதிகளில் தற்போது 198 தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி தொடர்ந்தும் போராடி வருவதாகவும் தற்போதைய ஜீவனோபாயத்தின் படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் நிச்சயம் அவசியம் எனவும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

தேயிலைத் தொழிலை ஆரம்பித்து தற்போது 152 வருடங்கள் கடந்துள்ளன. அப்போது சுமார் 5 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்திருந்த நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது.

அப்போது அமைச்சராக இருந்த ரணில்

1992ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூலம் நாட்டில் 449 தேயிலை தோட்டங்களை 22 சா்வதேச நிறுவனங்களுக்கு 55 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டதாகவும் அதன் அனைத்து இலாபங்களையும் தேயிலை தோட்ட கம்பனிகள் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் கிடைக்காதவொரு பின்னணியில் மலையகத் தமிழ்க் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

இக் கூட்டங்கள் உண்மையில் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவா அல்லது தங்கள் கட்சிகளின் அரசியல் செல்வாக்குகளை மேலும் அதிகரித்துக் கொள்ளவா என்ற கேள்விகள் விஞ்சிக் காணப்படுகின்றன.

தோட்டத் தொழிலாளர்களும் மலையகத் தமிழ்க் கட்சிகளின் கடந்தகால போக்குகளை மதிப்பிட்டுத் தமது உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய தொழிற் சங்கங்கங்களை உருவாக்க வேண்டும்.

தொழிற் சங்க அரசியல்

இப்போது இருப்பதெல்லாம் அரசியல் கட்சிகளே. தொழிற் சங்கமாக ஆரம்பித்து அல்லது தங்களைத் தொழிற் சங்கங்கள் என்றே கூறிக் கொண்டு அரசியல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

தொழிற் சங்கங்கள் நேரடி அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதை தெரிந்தும் தெரியாதது போன்று செயற்படும் தொழிற் சங்கங்களின் அரசியல் செயற்பாடுகளைத் தோட்டத் தொழிலாளர்கள் முற்றதாகப் புறக்கணித்துத் தனித்துவமான தொழிற் சங்கங்களை உருவாக்க வேண்டிய காலமிது.

கனூஷியா புஷ்பகுமார்-

Recommended For You

About the Author: admin