விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சப்த சங்கரி

அரச வளங்கள் , வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பிற்பகல் 3.30க்கு கடமையை முடித்து அலுவலக நேரத்தை கடைப்பிடிக்காமல் சேவையை பொது மக்களுக்கு வழங்காமையை செய்தி அறிக்கையிட்டமை தொடர்பில் விசாரணை நடத்த ஊடகவியலாளர் சப்த சங்கரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமையன்று ( 29.04) சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் ஊடகவியலாளர் சப்த சங்கரியிடம் தெரிவித்த நிலையில் இதன் உண்மைத் தன்மையை ஆராய அவர் அங்கு களஆய்வை மேற்கொண்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரும் அதே பிரதேச செயலகப்பிரிவில் வசித்து வரும் நிலையில் தகவலறியும் சட்டம் மூலம் தகவல்களை அப்பிரதேச செயலகத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

இவ்வாறு கோரப்பட்ட தகவல்களுக்கு ‘பொருத்தமற்றது’ என மாத்திரம் பதிலளிக்கப்பட்டிருந்தமையால் மேன்முறையீடு செய்வதற்காக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் சென்றிருந்தார்.

அங்கு சென்ற போது பிரதேச செயலர் நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருப்பதாக தெரிவித்த நிலையில், குறித்த நிகழ்வு நிறைவடைந்து அவர் 3 மணிக்கே அலுவலக வாகனத்தில் வீட்டுக்கு செல்வது ஊடகவியலாளரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலகத்தில் பொறுப்பான அதிகாரிகள் யாரும் இன்மை மற்றும் பிற்பகல் 4.15க்கு மூடப்படும் காரியாலயம் 3 மணிக்கே படிப்படியாக மூடப்படுவது காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 40 கிலோமீட்டர் சென்றும் கூட ஊடகவியலாளரால் சேவையை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இது தொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் உண்மை என்பதை உணர்ந்துள்ளார்.

குறித்த விடயம் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு பாரிய அசளகரியத்தை எற்படுத்தும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் மூலம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த புகார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர் சப்த சங்கரி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin