இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அதி சொகுசு வாகனங்களுக்கு பதிலாக மிக மலிவான சிறிய வாகனங்களை பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக எரிபொருள் செலவு , சேவை கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவு காரணமாக அவர்கள் இவ்வாறு சிறிய வாகனங்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, அதிக எரிபொருள் செலவு காரணமாக நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்பது மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பது போன்றவற்றை மட்டுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுப்போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரயில் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்வசம் காணப்பட்ட அதி சொகுசு வாகனங்களை விற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனமொன்றை விலைக்கு வாங்க சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி வாய்ந்த வரி அற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடானது பொருளாதார சிக்கல்கள் காரணமாக சுமார் 10 வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் குறித்த வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் அல்லது அதனை விட குறைந்த விலையிலான வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அரசாங்கம் இது தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற பணிக்குழாம் பிரதானி மற்றும் பிரதி செயலாளர் நாயகமான சட்டத்தரணி சமிந்த குலரத்ன தெரிவித்தார்.