ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம்: அமெரிக்கா அதிருப்தி

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி (புதன்கிழமை) கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்களில் இந்த தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

ஈரானின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பில் 120 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து சேர்க்கப்படும்.

இத்திட்டம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலப்பரப்புக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி தற்போது மூன்று நாள் பயணமாக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலை சீர்செய்வதற்காக இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, நேற்று ஏப்ரல் 22ஆம் திகதி (திங்கட்கிழமை), இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் பேச்சுகள் நடத்தினார்.

பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு ரைசி இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், ரைசி கொழும்பிற்கு ஒரு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு ஜனாதிபதிகளும் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவதற்கும், உமா ஓயா என பெயரிடப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

529 மில்லியன் டொலர் மதிப்பில் ஈரானிய நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் 2015 இல் முடிக்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மற்றும் பல சிக்கல்கள் காரணமாக பல முறை இடைநிறுத்தப்பட்டு தற்போது இறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால் அமெரிக்கா ஏற்கனவே, ரைசியின் பயணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் கவலையை வெளிப்படுத்தியிருந்ததுடன், இராஜதந்திர ரீதியான அழுத்தங்களையும் கொடுத்திருந்தது.

என்றாலும், இந்த எதிர்ப்புகளை மீறி ஈரான் ஜனாதிபதியின் பயணத்துக்கு இலங்கை ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தின் பின் கடுமையான இராஜதந்திர நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை இலங்கை எதிர்கொள்ளலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin