பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களுக்கான விற்பனை சந்தை அதிகரித்து வரும் நிலையில், எம்மாஸ் எனும் தொண்டு நிறுவனம் அதன் நிகழ்நிலை வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை புத்தக விற்பனை மூலம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பயன்படுத்திய புத்தக விற்பனைக்கு வரி விதிக்க பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், இந்த தீர்மானமானது புத்தக வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவிபுரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் புத்தகக் கண்காட்சியில் உரையாற்றிய மெக்ரோன், பயன்படுத்திய புத்தகங்கள் அமேசான் போன்ற முக்கிய நிகழ்நிலை சில்லறை தளங்களில் விற்கப்படும் புத்தகங்கள் பிரான்ஸின் புதிய புத்தகங்களின் விலைக்கு போட்டி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்திய புத்தகங்கள்
பிரான்ஸில் பயன்படுத்திய புத்தகங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக வெளியீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களில் சுமார் 20 வீதம் பயன்படுத்தப்பட்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பணவீக்கத்தின் போது மிகவும் கவரச்சிகரமானதாக பயன்படுத்திய புத்தகங்கள் பார்க்கப்படுகின்றன.
இதனிடையே, பயன்படுத்திய புத்தகங்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதே நேரம் புதிய புத்தக விற்பனை சீராக இருப்பதாகவும் கலாசார அமைச்சு மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர்களின் உரிமைகள் சங்கமான சோபியாவின் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், நுகர்வோர் பயன்படுத்திய புத்தகங்களை கொளவனவு செய்வதற்கான காரணங்கள் விலையால் உந்தப்பட்டதே தவிர, பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குத் தூண்டக்கூடிய சூழல் அல்ல என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.